5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா–சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும்: இண்டிகோ முன்னிலை

5 ஆண்டுகளுக்குப் பின், இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கவிருக்கிறது. அதிகரித்து வரும் வர்த்தக நிச்சயமற்ற சூழலில், அரசியல் உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, விமான சேவையை மீண்டும் தொடங்கும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், சேவை எந்த தேதியில் தொடங்கும் என்கிற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 50% வரியை விதித்துள்ள நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி சீனாவுக்கு விஜயம் செய்தார். உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா–சீனா நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த வரி, இரு நாடுகளின் பொருளாதாரத்தில் நெருக்கடியை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், போட்டியாளர்களாக கருதப்படும் இந்தியா–சீனாவுக்கு இடையிலான தூதரக உறவுகள் வலுப்பெறும் அறிகுறிகள் தென்படுகின்றன.

இதற்குமுன்னர், ஆகஸ்ட் மாதத்தில் புதுதில்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பிரதமரை நேரில் சந்தித்து, ஒருவருக்கொருவர் நலன்களை மதிக்கும் வகையில் முன்னேற்றம் எட்டப்பட வேண்டும் என பாராட்டினார்.

இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, அனுமதி கிடைத்தவுடன் இந்தியா–சீனாவுக்கு இடையே விமானங்களை இயக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல், ஏர் இந்தியாவும் விரைவில் இந்தப் பாதையில் விமான சேவையை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box