ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கியின் 50% கிளைகள் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு
சென்னையில் நேற்று நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக பங்கேற்றார். விழாவில் ஆண்டு மலரை வெளியிட்ட அவர், வங்கிகள் தேசிய வளர்ச்சியில் ஆற்றும் பங்களிப்பைப் பற்றிச் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நாட்டின் வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு நிதி பரிவர்த்தனைகளுக்குப் புறம்பாக பல துறைகளில் விரிவடைந்துள்ளது. குறிப்பாக ஊரகப் பகுதிகள்தான் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களாகும். அங்கு சிட்டி யூனியன் வங்கியின் 50 சதவீத கிளைகள் செயல்படுவது பாராட்டத்தக்கது.
மத்திய அரசு, ஒருங்கிணைந்த நிதி வளர்ச்சிக்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 56 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டன. நேரடி நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் பயனாளிகளிடம் இடையூறு இன்றி சென்றதால் டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது.
விவசாயிகள் முன்னேற்றம் மற்றும் ஊரக பொருளாதார மேம்பாட்டுக்கு வங்கிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். சரியான நேரத்தில் கடன், நிதி அறிவு, நவீன வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்கினால், விவசாயத் துறையை நிலையான லாபம் பெறும் துறையாக மாற்ற முடியும். அதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சியின் இயந்திரமாக மாற, வங்கிகள் அதிக பங்காற்ற வேண்டும். பிரதமரின் சாலையோர வியாபாரிகள் நலத்திட்டம் மூலம் அவர்களுக்கு பெரும் பலன் கிடைத்துள்ளது. இது 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வங்கி சேவைகள் ஊரகப் பகுதிகளில் சிறு விவசாயிகள், சுய உதவி குழுக்கள், வியாபாரிகள் அனைவருக்கும் சென்றடைந்துள்ளன. நமது வங்கிகள் பின்தங்கிய மக்களுக்கு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து, விவசாயிகளுக்கு எளிய கடன் வழங்கும் பாதையை ஏற்படுத்த வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.
விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அண்மையில் வர்த்தக வங்கிகளின் சொத்து தரம் மிகுந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 7.8% வளர்ச்சி பெற்றுள்ளது. நீண்டகால கடன் வளர்ச்சி 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பணவீக்க விகிதம் கடந்த ஜூலையில் 1.55% வரை குறைந்தது. EPFO-வில் ஜூன் மாதத்தில் மட்டும் 22 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். பொதுமக்களின் வாங்கும் திறன் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை 4.4% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலை வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளிலும் முன்னேற்றம் உள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான புதிய திருத்தங்கள் இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்,” என்றார்.
இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் என்.காமகோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, இரண்டு நாள் தமிழகப் பயணத்தின் ஒருபகுதியாக குடியரசுத் தலைவர் சென்னைக்கு வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தாமோ அன்பரசன், தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.