மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அவசியம்: மீனவர் சங்கம் வலியுறுத்தல்

அமெரிக்கா இந்திய கடல் உணவு பொருட்களுக்குப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அந்த தாக்கத்தை சமாளிக்க மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும் என அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) மீனவர் பிரிவு கோரியுள்ளது.

நாட்டின் உணவு உற்பத்தி, அன்னிய செலாவணி வருவாய், கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு என பல துறைகளில் மீன்பிடித் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய தொழிலாகத் தொடங்கிய மீன்பிடி இன்று வணிகரீதியாகவும், தேசிய பொருளாதாரத்தில் அத்தியாவசிய துறையாகவும் வளர்ந்துள்ளது.

ஆனால், அதிகப்படியான மீன்பிடி, சட்டவிரோதமான மற்றும் அழிவுக்குரிய முறைகள், கடல் வாழ்விட அழிவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள், மானியக் குறைப்புகள் ஆகிய காரணங்களால் மீன்வளம் குறைந்து, மீனவர்கள் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய கடல் உணவுகளுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக ஆண்டுதோறும் ரூ.24,000 கோடி மதிப்புள்ள கடல் உணவுப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய வரிவிதிப்பால், தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விலை உயர்ந்ததால் அமெரிக்க இறால் இறக்குமதியாளர்கள் ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையிலேயே, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் கூறியதாவது:

“மீன் உணவு பொருட்கள், மீன்பிடி உபகரணங்களுக்கு முழுமையான ஜிஎஸ்டி விலக்கு வழங்கப்பட வேண்டும் என மீனவர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

முன்னர் பதப்படுத்தப்பட்ட மீன் உணவு, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன் வளர்ப்பு சாதனங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. அதை 5% ஆகக் குறைத்தது சிறிய நிவாரணமாக இருந்தாலும், தற்போது அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு காரணமாக ஏற்றுமதி பெரும் நெருக்கடியில் உள்ளது.

சர்வதேச போட்டி, பல்வேறு நாடுகளின் சுங்கக் கட்டணங்கள், போக்குவரத்து செலவுகள் ஆகியவை ஏற்கனவே ஏற்றுமதியை பாதித்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசு உடனடி நிவாரணம் அளித்து, மீன் உணவு ஏற்றுமதியை காப்பாற்ற வேண்டும். இல்லையெனில், பாதிப்பின் சுமை மீனவர்கள்மீதே விழும்.

இந்த சூழ்நிலையைக் குறைக்க உள்நாட்டு மீன் உணவுப் பொருட்கள் நுகர்வை அதிகரிக்க வேண்டும். எனவே, மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு முழுமையாக ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட வேண்டும். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் காப்பாற்றும்,” என்றார்.

Facebook Comments Box