அமெரிக்க வரி கொள்கை தாக்கம்: ராணிப்பேட்டை காலணி தொழில்கள் நெருக்கடி

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பின் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் காலணிகள் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் சிறு நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளுக்கும் பெரும் அபாயமாக உருவெடுத்து வருகிறது.

1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் தற்போது 200-க்கும் மேற்பட்ட காலணி மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக காலணி ஏற்றுமதியே முக்கிய வருமானமாக இருந்து, உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தது.

ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 50 சதவீதம் கூடுதல் வரி காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காலணிகள் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் கிடங்குகளில் தேங்கி கிடக்கின்றன. அமெரிக்க சப்ளையர்கள் கூடுதல் வரி காரணமாக ஆர்டர்களை நிறுத்தியதால், தொழிற்சாலை உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தில் சிக்கியுள்ளனர்.

இதனால், கடன் பெற்று தொழில் நடத்தி வந்த தொழிலதிபர்கள் பொருளாதார ரீதியாக துவண்டு போவதாகவும், சில நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்ததால் பணியாளர்களின் வேலை வாய்ப்புகள் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தொழிலாளர் குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமடையும் என அச்சம் நிலவுகிறது. எனவே, தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வரி சுமையை குறைக்கும் முயற்சி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்

Facebook Comments Box