‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி 18% ஆக உயர்வு: தொழில் துறையினர் அதிருப்தி

‘ஜாப் ஒர்க்’ பிரிவில் உள்ள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12% இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதற்காக தொழில் துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வரியை 5% வரை குறைத்து, செலுத்திய வரியை திரும்ப பெறும் சலுகை (‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’) வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை-திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியதாவது:

“ஜாப் ஒர்க் பிரிவில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி 12% இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில் முனைவோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இதை 5% ஆக குறைக்க வேண்டும். இதைத் தவிர மற்ற வரி சீர்திருத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை” என்றார்.

தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கம் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் கூறியதாவது:

“குறுந்தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ‘ஜாப் ஒர்க்’ பிரிவிற்கு குறைந்த ஜிஎஸ்டி கோரிக்கை வைத்திருந்த நிலையில், 18% ஆக உயர்த்தப்பட்டது மிகுந்த அதிர்ச்சி. வரிச்சலுகை (‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’) கிடைக்கும் நேரம் 90 நாட்கள் ஆகும்; இதனால் நடப்பு மூலதனம் கடுமையாக பாதிக்கப்படும். மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நாங்கள் மத்திய நிதி அமைச்சருக்கு மனு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறியது:

“18% ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைத்தால், திரும்ப பெறும் சலுகை (‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’) பெற முடியாது என்று கூறப்படுகிறது. நடப்பு மூலதனம் பாதிக்காமல் 5% வரை வரியை குறைத்து, இதற்கான சலுகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இதை நாங்கள் வலியுறுத்துவோம்” என்றார்.

இந்திய தொழில்முனைவோர் சங்கம் தேசிய தலைவர் ரகு நாதன்:

“வரி சீர்திருத்தத்தின் பெயரில் ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது நல்லது அல்ல. குறுந் தொழில்முனைவோருக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை 5% வரை குறைக்க வேண்டும். எம்எஸ்எம்இ நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்” என்றார்.

‘சிஐஏ’ தொழில் அமைப்பின் தலைவர் தேவகுமார் நாகராஜன் கூறியதாவது:

“ஜாப் ஒர்க் பிரிவு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டதால் நடப்பு மூலதனம் பாதிக்கப்படும். பணி வாய்ப்புகள் குறையும், பெரிய நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு நகர்வதற்கான அபாயம் உள்ளது. இதனால், வரியை 5% ஆகக் குறைத்து, எம்எஸ்எம்இ நிறுவனங்களை பாதுகாக்கவும், தொழில் வளர்ச்சிக்கு உதவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Facebook Comments Box