இந்திய ஜவுளித்துறைக்கு புதிய திசை? – ஜிஎஸ்டி 2.0 தாக்கத்தைப் பகிரும் திருப்பூர் தொழில்துறை

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு முயற்சிகள், இந்திய ஜவுளி மற்றும் தயாரி ஆடைத் துறையின் உலகளாவிய போட்டித் திறனை வலுப்படுத்தி, மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று திருப்பூர் தொழில்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் கடந்த இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெற்றது. அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.

ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய நடவடிக்கைகள் – கட்டமைப்பு மாற்றங்கள், வரி விகித எளிமைப்படுத்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் ஆகிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக கார், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், டி.வி போன்ற பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) வரிச்சுமை குறையும். இதை திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (AEPC) தலைவர் ஏ. சக்திவேல்:

“ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவுகளை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை வலுப்படுத்தும். ஏற்றுமதி பணம் 7 நாட்களில் திரும்பக் கிடைப்பது, தற்காலிக நிதி ரீபண்ட் நீட்டிப்பு, ரூ.1000க்குக் குறைவான தொகைக்கு ஜிஎஸ்டி திரும்பப்பெறும் சலுகை ஆகியவை ஏற்றுமதியாளர்களுக்கு உடனடி நிவாரணம் தரும். பணப் புழக்க சிக்கல்கள் குறையும். இந்திய அரசின் முன்னோக்கான தலைமையை, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோரின் பங்களிப்பை நன்றியுடன் குறிப்பிடுகிறோம். இந்த மாற்றங்கள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் பலம் தரும்,” என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன்:

“ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஜவுளித்துறைக்கு நன்மை பயக்கும் வகையில் உள்ளன. அனைத்தும் கணினிமயமாக்கப்படுவதால் உற்பத்தியாளர்களுக்கான ரீபண்ட் எளிதில் கிடைக்கும். முந்தைய 12% வரி விகிதத்தில் இருந்த பெரும்பாலான பொருட்கள் 5% க்குள் ஒரே நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வாங்குதல்–விற்பனை வரி வித்தியாசம் நீக்கப்பட்டதால் உற்பத்தி சுமை குறையும். குறிப்பாக, பாலியஸ்டர் நூல்களுக்கு 5% ஆக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா போட்டியாளர் நாடுகளோடு சமமாக இருந்து சந்தையைப் பிடிக்க உதவும்,” எனக் கூறினார்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIMA) தலைவர் வைகிங் ஈஸ்வரன்:

“ஜவுளி மற்றும் டெக்ஸ்டைல் துறையிலான அனைத்து வரிகளிலும் ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இது தொழில்துறைக்கு ஊக்கம் அளிக்கும். குறிப்பாக சிறு, குறு உற்பத்தியாளர்களின் மூலதன நிதி வசதி அதிகரிக்கும். மத்திய அரசுக்கு நன்றி,” என்றார்.

Facebook Comments Box