GIS: சொத்து மதிப்பீட்டில் புதிய கருவி!
புவியியல் தகவல் முறைமை (Geographic Information System – GIS) எனப்படும் தொழில்நுட்பம், நிலம் மற்றும் கட்டிடங்களின் மதிப்பீட்டில் மிகப் பெரிய பங்காற்றி வருவதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
ஒரு சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மீது துல்லியமான அறிக்கைகளைத் தருபவர்களே மதிப்பீட்டாளர்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசாங்கம், தனிநபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு சொத்து மதிப்பு கணக்கீடு, காப்பீடு, வரி, விற்பனை, அடமானம் போன்ற சேவைகளை இவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய பணிகளில் GIS பெரும் ஆதரவாக இருக்கிறது.
பாலாஜி அசோசியேட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எல். பாலாஜி கூறுகையில்:
“நிலம், கட்டிட மதிப்பீட்டாளர்களுக்கு GIS மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இடம் சார்ந்த தரவுகளை வைத்து புவியியல் அமைப்புகளை ஆய்வு செய்து புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும், தரவுகளை வரைபடங்கள், 3D காட்சிகள் போன்ற முறைகளில் எளிமையாகக் காட்டுகிறது. செயற்கை புகைப்படங்களில் வேளாண்மை நிலம், அரசுத் துறை கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என தனித்தனியாக வண்ணங்கள் கொடுத்து பிரித்து காட்டுவதால் புரிதல் அதிகரிக்கிறது.
மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு, வெள்ளம் போன்ற பேரிடர்களை மதிப்பிடவும் உதவுகிறது. நகர நிலப் பயன்பாடு, உள்கட்டமைப்பு மேலாண்மை, நில உரிமை, மதிப்பு, பதிவுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் அரசாங்கம் நில மேலாண்மை, சொத்து மதிப்பீடு, பொதுமக்களுடனான தொடர்பு ஆகியவற்றில் திறமையை மேம்படுத்த முடியும்,” என்றார்.
இந்திய மதிப்பீட்டாளர்கள் கழகத்தின் மதுரை கிளைத் தலைவர் விஜயகுமார் கூறுகையில்:
“GIS தொழில்நுட்பம் புவியியல் தரவை உருவாக்க, நிர்வகிக்க, பகுப்பாய்வு செய்ய பயன்படுகிறது. செயற்கைக் கோள், வான்வழி படம், தரை ஆய்வு போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவைச் சேகரித்து ஒருங்கிணைக்கிறது.
பின்னர் அவற்றை ஆய்வு செய்து வரைபடங்கள், விளக்கப்படங்கள், காட்சிகள் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நகர்ப்புற திட்டமிடல், இயற்கை வள மேலாண்மை, அவசரகால நடவடிக்கை, பொது சுகாதாரம் போன்ற பல துறைகளில் முடிவெடுக்க உதவுகிறது,” எனத் தெரிவித்தார்.