பரஸ்பர வரி சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால் வசூலிக்கப்பட்டதை மீளச் செலுத்துவோம் – அமெரிக்க நிதியமைச்சர்
அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, அந்தந்த நாடுகள் விதிக்கும் அளவிலேயே ட்ரம்ப் ஆட்சி “பரஸ்பர வரி” (Reciprocal Tariff) விதித்தது. இதை எதிர்த்து நியூயார்க் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த மே மாதத்தில், நீதிமன்றம் ட்ரம்பின் உத்தரவை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 29-ம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றமும், கீழ் நீதிமன்றத் தீர்ப்பைவே சரியானது என்று அறிவித்தது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக, அந்தத் தீர்ப்பு அக்டோபர் 14 வரை தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர், அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ட்ரம்ப் சார்பில், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் பேட்டியளித்தபோது,
“உச்ச நீதிமன்றமும் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டால், வசூலித்த வரியில் 50% தொகையை திருப்பித் தர வேண்டியிருக்கும். இதனால் கருவூலத்துக்கு பெரும் சுமை ஏற்பட்டாலும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை பின்பற்றுவோம். அதேசமயம், வரி தொடர்பான பிற வழிகளையும் ஆய்வு செய்கிறோம்” என்றார்.
அதேநேரம், தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குநர் கேவின் ஹசெட் கூறியதாவது:
“ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தாலும், அந்த வரிகளை தொடர சட்ட ரீதியான பல்வேறு வழிகள் உள்ளன” என்றார்.