தங்க விலை மீண்டும் சாதனை உச்சம் – பவுன் ரூ.80,480!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மேலும் உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய உச்ச நிலையை எட்டியது. பவுனுக்கு ரூ.440 உயர்வு ஏற்பட்டு, ரூ.80,480-க்கு விற்பனையானது. தங்க விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே போவதால், குடும்ப விழாக்கள், திருமணங்கள் ஆகியவற்றுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை நிர்ணயம் உலக பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை சார்ந்தே இருக்கும். கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தங்க விலை இடைவிடாது உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50% வரி விதித்தது, ரூபாயின் மதிப்பு டாலருடன் ஒப்பிடும் போது குறைந்தது போன்ற காரணங்கள் தங்க விலை அதிகரிக்கச் செய்தன. இதனால் தினமும் புதிய உச்சங்கள் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில், செப்டம்பர் 6-ந்தேதி தங்கம் பவுனுக்கு ரூ.80,000-ஐ தாண்டி, ரூ.80,040-க்கு விற்பனையாகி சாதனை படைத்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று பவுனுக்கு ரூ.440 அதிகரித்து, ரூ.80,480-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.55 உயர்ந்து, ரூ.10,060-க்கு சென்றது.
இதேபோல் வெள்ளி விலையும் உயர்வை கண்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.140 ஆனது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 அதிகரித்து ரூ.1.40 லட்சம் ஆனது.
தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்கும் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.