உலக நாடுகளுக்கு சமமான, வெளிப்படையான வர்த்தகம் அவசியம்: அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக, அமெரிக்கா சமீபத்தில் இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. இதை முன்னிட்டு, அமெரிக்காவின் வர்த்தக, வரி கொள்கைகளை விவாதிக்க பிரிக்ஸ் அமைப்பின் காணொலி கூட்டத்தை பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஏற்பாடு செய்தார்.

இந்தக் கூட்டத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். வர்த்தக வரி பிரச்சினையால் இந்தியாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பை சரி செய்ய முயற்சி எடுத்து வரும் அமெரிக்க அதிபர், அதேவேளையில், பிரிக்ஸ் கூட்டத்தை அமெரிக்காவுக்கு எதிரான சூழ்ச்சி என சந்தேகத்துடன் காண்கிறார்.

ட்ரம்ப் நிர்வாகத்துடன் சமநிலை பேண வேண்டும் என்ற காரணத்தால் பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

“இன்றைய உலக நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கரோனா தாக்கம், ரஷ்யா–உக்ரைன் போர், மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்கள், உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் – இவை அனைத்தையும் கடந்த சில ஆண்டுகளாக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.

உலகின் பன்முக அமைப்புகள் பலவீனமடைந்து, பல முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படாமலே தவிர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் உலகம் கடுமையான விளைவுகளை சந்திக்கிறது. இவ்வாறான சூழ்நிலைக்கேற்ப தான் பிரிக்ஸ் ஆலோசனை நடத்துகிறது.

வர்த்தகம் நிலைத்தன்மையுடன், முன்பே கணிக்கக்கூடிய சூழலில் நடைபெற வேண்டும். பொருளாதார நடைமுறைகள் அனைவருக்கும் நியாயமானதும், வெளிப்படையானதும், பொதுப் பயன்பாட்டிற்குரியவையாக இருக்க வேண்டும். சர்வதேச வர்த்தக நடைமுறைகளின் அடிப்படை விதிகள் பாகுபாடற்றதாகவும், அவை மதிப்புக் கொள்ளப்படவேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக நின்றுள்ளது” என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Facebook Comments Box