இந்தியாவின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுக மேம்பாட்டுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்வளத் துறைமுகத்தை, இந்திய அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பருத்தித்துறை துறைமுகம், இலங்கையின் வடக்கைப் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய மையமாக விளங்குகிறது. இந்திய எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள இது, ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து சுமார் 40 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ளது.
உள்நாட்டு போரின் காலத்தில், விடுதலைப் புலிகள் கடற்படையைச் சிதைக்க இலங்கை ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் இந்த துறைமுகம் சேதமடைந்தது. பின்னர் 1995-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடமிருந்து ராணுவம் கைப்பற்றியது.
2004 சுனாமியாலும் இந்த துறைமுகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது, 7 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த துறைமுகத்தில் 300 படகுகள் வரை நிறுத்தும் வசதி, மீன் பதனிடும் அறை, மீன் சந்தை மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளது.
வட மாகாண கடல்சார் வளர்ச்சியில் ஆர்வம் காட்டிவரும் சீனாவும், இந்த துறைமுகத்தை மேம்படுத்த முன்வந்தது. ஆனால் இறுதியாக, பருத்தித்துறை துறைமுக மேம்பாட்டு பணியை இந்தியாவுக்கு ஒப்படைக்க இலங்கை அமைச்சரவை முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய கடலோர பொறியியல் ஆய்வு நிறுவனம் சார்ந்த நிபுணர்கள் குழு யாழ்ப்பாணம் சென்றுள்ளது.
அவர்கள், வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்திய துணைத் தூதர் சாய் முரளியும் இதில் கலந்து கொண்டார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் இந்திய பிரதிநிதிகளை வரவேற்ற ஆளுநர் வேதநாயகன், “இந்தியாவின் உதவிக்கு நன்றி” தெரிவித்ததுடன், திட்டப் பணிகள் முன்னெடுக்க வட மாகாணத்தின் முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.