காப்பீடு, பங்குச் சந்தை முதலீட்டுக்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு

யுபிஐ மூலம் காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீடு போன்ற செலவுகளுக்கான ஒரு நாள் பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

தற்போதைய முறையில், தனிநபர்களுக்கிடையே யுபிஐ வழியாக ஒரு நாளில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மட்டுமே பணம் பரிமாற முடிகிறது. காப்பீடு, பங்குச் சந்தை முதலீடு, கடன் அட்டை நிலுவை போன்ற நிறுவனச் செலவுகளுக்கு ரூ.2 லட்சமாகவும், கல்விக் கட்டணம், ஐபிஓ (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கு ரூ.5 லட்சமாகவும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) புதிய அறிவிப்பின் படி, பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் மற்றும் அரசுக்கு செலுத்தப்படும் (EMD) தொகைக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பரிமாற்ற வரம்பும் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனுடன், போக்குவரத்து கட்டண வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்கிறது. கடன் அட்டை நிலுவை கட்டுவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம் மற்றும் ஐபிஓ பரிவர்த்தனைக்கு முன்பிருந்தது போலவே ரூ.5 லட்சம் வரை தொடர்கிறது.

ஆனால், தனிநபர் ஒருவரிடம் இருந்து மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் யுபிஐ பரிமாற்ற வரம்பு ரூ.1 லட்சமாகவே நீடிக்கிறது.

NPCI வெளியிட்ட அறிக்கையில், “பெருகிவரும் நிதி பரிவர்த்தனை தேவையை கருத்தில் கொண்டு, தொகை வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் கட்டணங்கள் தடையின்றி நிறைவேறுவதை உறுதி செய்யும்” என கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box