இந்தியாவின் பொருளாதாரம் 6.9% வளர்ச்சி அடையும் என ‘பிட்ச்’ கணிப்பு

நடப்பு நிதியாண்டு (2025–26) இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.5% இருந்து 6.9% ஆக உயர்த்தி இருப்பதாக அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி குறித்து புதுப்பிக்கப்பட்ட கணிப்பை வழங்கியுள்ள அந்த நிறுவனம், முன்னதாக 6.5% என மதிப்பிட்டதை, தற்போது 6.9% ஆக திருத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், எதிர்பார்ப்பதை விட வலுவான வளர்ச்சி, சேவைத் துறையின் முன்னேற்றம், நுகர்வு அதிகரிப்பு ஆகியவை காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிட்ச் தெரிவித்துள்ளது.

2025–26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்), இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8% என உயர்ந்தது. இது ரிசர்வ் வங்கி கணித்த 6.5% வளர்ச்சியை விட அதிகம். அதற்கு முன் இருந்த காலாண்டில் வளர்ச்சி 7.4% ஆக இருந்தது. அது பிட்ச் நிறுவனம் கணித்த 6.7% வளர்ச்சியை விட கூடுதலாகும்.

இந்திய பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு உள்நாட்டு தேவையின் அதிகரிப்பு, நிலையான வருமான நிலைமைகள் போன்றவை முக்கிய காரணங்கள் எனவும், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக சிக்கல்கள் இருந்தாலும், 2026 நிதியாண்டில் நிலையான வளர்ச்சிக்காக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் பிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box