நாட்டில் முதல் 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர் — டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
நாட்டிலேயே முதல்முறையாக 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சந்தையில் கொண்டு வந்துள்ளது. உலகளவில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனத் துறையில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ், தனது NTorq பிராண்டின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அதிவேக ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரை நேற்று சென்னையில் வெளியிட்டது. 150சிசி என்ஜின் கொண்ட நாட்டின் முதலாவது ஸ்கூட்டர் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இளைஞர்கள் விரும்பும் வலுவான செயல்திறன், கவர்ச்சியான ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 0-60 கி.மீ. வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் எட்டும் திறன் கொண்ட இது, அதிகபட்சமாக மணிக்கு 104 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.
மல்டி-பாயிண்ட் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், ஸ்போர்ட்டி டெயில் லைட்ஸ், ஏரோடைனமிக் விங்லெட்ஸ், தனித்துவ சவுண்ட் கொண்ட ஸ்டப்பி மப்ளர், நேக்டு ஹேண்டில் பார் மற்றும் வண்ண அலாய் சக்கரங்கள் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
மேலும், இந்த பிரிவில் முதல்முறையாக ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு, லைவ் ட்ராக்கிங், வழிகாட்டும் ஜிபிஎஸ் உட்பட சுமார் 50 அம்சங்களுடன் வருகிறது. நான்கு வண்ணங்களில் அறிமுகமான இதன் ஆரம்ப விலை ரூ.1,19,000 ஆகும்.
இதுகுறித்து டிவிஎஸ் கார்ப்பரேட் பிராண்ட் & மீடியா பிரிவு தலைவர் அனிருதா ஹல்தார் தெரிவித்ததாவது:
“NTorq 150 தனித்துவமான டிசைன், சிறந்த செயல்திறன், முன்னேற்றமான தொழில்நுட்பத்தின் கலவையாக உள்ளது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.