ஒரு பவுன் தங்கம் ரூ.82,000-ஐ எட்டியது – நகை வியாபாரிகள் விளக்கம்

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தைத் தொட்டு, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.81,920-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளின் தாக்கம் காரணமாக தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை மாதத்திலிருந்து தங்க விலை கடுமையாக உயர்ந்தே வருகிறது. கடந்த 6-ம் தேதி ஒருகிராம் தங்கம் ரூ.10,000-ஐ கடந்தது. அதன்பின் 7-ம் தேதி ரூ.10,005, 8-ம் தேதி ரூ.10,060, 9, 10, 11-ம் தேதிகளில் ரூ.10,150-ஆக உயர்ந்தது. அப்போது ஒரு பவுன் ரூ.81,200-க்கு விற்றது.

நேற்று, ஒருகிராமுக்கு ரூ.90 உயர்ந்ததால், ஒரு பவுன் ரூ.720 உயர்ந்து, ரூ.81,920-ஐ தொட்டது. இதன் மூலம் தங்க விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 24 காரட் சுத்த தங்கம் ஒருகிராம் ரூ.11,170, ஒரு பவுன் ரூ.89,360 என நிர்ணயிக்கப்பட்டது. செப்டம்பர் 1-ம் தேதி ஒரு பவுன் ரூ.77,640 இருந்த நிலையில், நேற்று வரை ரூ.4,280 அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்குவோருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி விலையும் சாதனை:

கடந்த சில நாட்களில் மாற்றமின்றி இருந்த வெள்ளி விலை, நேற்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.142-ஆக உயர்ந்தது. இதன் விளைவாக ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,000 உயர்ந்து, ரூ.1.42 லட்சமாக விற்பனையாகியுள்ளது.

வியாபாரிகள் கருத்து:

இது குறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது:

“அமெரிக்காவின் பொருளாதார நிலைமை சீர்குலைந்துள்ளது. அதோடு, இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50% வரி உள்ளிட்ட காரணங்கள் தங்க விலையை தினமும் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. தங்கம் விலை அதிகரிக்கும்போது வெள்ளியும் உயர்வது வழக்கமானதே. தற்போது தொழில் துறையில் வெள்ளி தேவையும் அதிகரித்துள்ளதால், வெள்ளி விலை வரலாற்று சாதனை எட்டியுள்ளது. எதிர்காலத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-ஐ எட்டும் வாய்ப்பு உண்டு” என்றார்.

Facebook Comments Box