தீபாவளிக்கு முன் பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் புதிய வசதி!
பணியாளர் பிஎப் நிதியிலிருந்து (EPFO) பணத்தை, வங்கிகளைப் போலவே ஏடிஎம் மூலம் எடுக்க விரைவில் ஏற்பாடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
EPFO தொடர்ந்து பல நவீன சேவைகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், வரும் தீபாவளிக்கு முன் இந்த முக்கியமான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
EPFO-வின் 3.0 திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. அடுத்த மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில், வங்கி சேவைகளைப் போல பிஎப் சேவைகளையும் எளிமைப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசப்பட உள்ளது. அதன்படி,
- பிஎப் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி,
- யுபிஐ (UPI) மூலம் பண பரிவர்த்தனை செய்வது போன்ற அம்சங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
மேலும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என வர்த்தக சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதன்படி, தற்போதைய ₹1,000 ஓய்வூதியத்தை ₹1,500 முதல் ₹2,500 வரை உயர்த்துவது குறித்து EPFO-வின் சென்ட்ரல் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் ஆராய உள்ளது.
ஆனால், பிஎப் பணம் ஓய்வுக்குப் பின் பாதுகாப்புக்காக வைத்திருப்பதால், அதை ஏடிஎம் அல்லது யுபிஐ மூலம் எடுப்பதை சில தொழிற்சங்கங்கள் எதிர்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஏனெனில், இது பிஎப் சேமிப்பின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கக்கூடும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்காக ₹5 லட்சம் வரை பிஎஃப்பிலிருந்து பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.