மீண்டும் வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது; 4 மாதத்தில் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அடுத்த 4 மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. நேற்று காலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து நேற்று மாலை பவுனுக்கு 1,120 உயர்ந்து ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.10,640-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.92,856-க்கு விற்கப்பட்டது.

மேலும், வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.150 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,50,000 ஆகவும் இருந்தது. கடந்த 6-ம் தேதி ஆபரணத் தங்கம் பவுன் ரூ.80,040-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.85,120-ஆக உயர்ந்தது. கடந்த 17 நாட்களில் பவுனுக்கு ரூ.5,080 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகது. கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் தற்போது வரை பவுனுக்கு ரூ.27,040 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வால், நகை வாங்க எண்ணியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறும்போது, “எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியுள்ளது. இதனால், இந்திய மென்பொறியாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டு, திறமையான ஆட்களுக்கு பற்றாக்குறை உருவாகும், இதன் மூலமாக, அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதைக்கு செல்லும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரு முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதுதவிர, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த 4 மாதங்களில் பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்புள்ளது” என்றார்.

Facebook Comments Box