அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம்

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்றுகள் நடுவதில் விவசாயிகள் பெரும் ஈடுபாட்டைக் காட்டி வருகின்றனர். இவ்வாண்டில் மட்டும் புதிதாக சுமார் 1 லட்சம் பாக்கு கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளே முதன்மையாக உள்ளன. மொத்த மாவட்ட பரப்பளவு 4 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேராக இருக்க, அதில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேரில் சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சீராக இருப்பதாலும், மண்வளம் உகந்ததாலும், விவசாயிகள் ஆர்வத்துடன் பாக்கு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் வாணியாறு அணை கால்வாய்கள் பாசனமாக அமைந்துள்ள மொரப்பூர், இட்லப்பட்டி, மோளையானூர், பூனையானூர், மஞ்சவாடி, புதுப்பட்டி, பாப்பம்பாடி, வள்ளி மதுரை அணை பகுதி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, தாதரவலசை, வாச்சாத்தி, வீரப்பநாய்க்கன் பட்டி, தாதம்பட்டி, தென்கரைக்கோட்டை, ராமியம் பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் பாக்கு நடவு அதிகரித்து வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல மழை பெய்திருப்பதால் நீர் தட்டுப்பாடு குறைந்து, நிலத்தடி நீர் வளமும் மேம்பட்டுள்ளது. ஆனால், கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் பாரம்பரிய சாகுபடியில் குறைந்த வருமானம் போன்ற காரணங்களால், பராமரிப்பு குறைவான பாக்கு சாகுபடியை விவசாயிகள் விரும்பி வருகின்றனர்.

பாக்கு விவசாயிகள் கூறுவதாவது: “பராமரிப்பு எளிது, குத்தகைக்கு விடலாமென்ற வாய்ப்பு, மற்றும் நிரந்தர வருவாய் கிடைப்பதால் பாக்கு மரக்கன்று நடுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. 5–6 ஆண்டுகளில் பயன் தரக்கூடிய பாக்கு மரங்கள், ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் தரக்கூடியவை. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான பாக்கு கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இப்போது இளம் கன்றுகளை வெயிலில் இருந்து காக்க வாழை கன்றுகளை பக்கத்தில் நட்டு, ஓராண்டு பாதுகாப்புடன் வளர்த்து வருகின்றோம்” என்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “கடந்த 3 ஆண்டுகளில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் பாக்கு நடவு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு மட்டும் சுமார் 125 ஏக்கரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாக்கு கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை 3–5 ஆண்டுகளில் விளைச்சலைத் தரும் நிலையில், பாக்கு உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மலையடிவார கிராமங்களில் நீர் தட்டுப்பாடு குறைவாக இருப்பதால், அந்த பகுதிகளில் விவசாயிகள் அதிக ஈடுபாட்டுடன் பாக்கு சாகுபடியில் இறங்கியுள்ளனர்” என்றனர்.

Facebook Comments Box