அமெரிக்காவின் 50% வரி தாக்கம்: சீனாவுக்கான இறால் ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதன் காரணமாக, இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், சீனா புதிய சந்தையாக உருவாகியுள்ளது.

இதுகுறித்து கிங்ஸ் இன்ஃப்ரா வென்ச்சர்ஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷாஜி பேபி ஜான் தெரிவித்துள்ளார்:

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசாங்கம் விதித்த கூடுதல் வரி, அந்நாட்டு சந்தையில் இந்தியாவின் போட்டித் திறனை கடுமையாகக் குறைத்துள்ளது.

இந்த நடவடிக்கையால், ஈக்வடார், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதிகளை ஒப்பிடும்போது, இந்திய இறால்கள் அதிக விலையுடையதாக மாறியுள்ளது. இதனால் அங்கிருந்து வரும் ஆர்டர்கள் குறைந்துவிட்டன. இந்த பாதிப்பை தவிர்க்க, இந்திய சப்ளையர்கள் சீனாவையும் பிற ஆசிய சந்தைகளையும் நோக்கி ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சி செய்கின்றனர்” என்றார்.

சீனாவில் உள்நாட்டு தேவை அதிகமாக இருப்பதால், இந்திய இறால்களுக்கு அங்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்பட்டாலும், இது இந்தியாவுக்கு சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

முன்பு, அமெரிக்காவுக்குப் பின், இந்திய இறாலை அதிக அளவில் இறக்குமதி செய்த இரண்டாவது பெரிய நாடாக சீனா இருந்தது. ஆனால் இப்போது அது முதலிட இறக்குமதியாளராக உயர வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், வரி இல்லாத சந்தைகளுக்கு மீள்நிறுவப்பட்ட ஏற்றுமதிக்காக சீனா, இந்தியாவிலிருந்து அதிகளவிலான இறால்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது.

அமெரிக்காவை மட்டும் சார்ந்திராமல், ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளின் சந்தைகளிலும் தங்கள் நிலையை விரிவுபடுத்த இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஒப்பந்தங்களை வைத்திருக்கும் இந்திய ஏற்றுமதியாளர்கள், கூடுதல் செலவினை பகிர்ந்து கொள்ள அங்குள்ள இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் டெல்லி-என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ளூர் சந்தையிலும் இறால் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box