ரூ.62,370 கோடிக்கு 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

இந்திய விமானப்படைக்கு தேவையான 97 தேஜஸ் எம்கே-1ஏ ரக போர் விமானங்களை வாங்குவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்துடன் ரூ.62,370 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, விமான உற்பத்தி 2027-28-ம் ஆண்டில் தொடங்கி, அடுத்த 6 ஆண்டுகளுக்குள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். வாங்கப்படும் விமானங்களில் 29 ரகங்கள் இரட்டை இருக்கைகள் கொண்டதாக இருக்கும். தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களில் சுமார் 64% உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.

தேஜஸ் எம்கே-1ஏ ரகத்தில், 2021-ல் கொடுக்கப்பட்ட ஆர்டருடன் ஒப்பிடும்போது 67 கூடுதல் பாகங்கள் சேர்க்கப்படுகின்றன. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏஇஎஸ்ஏ ரேடார், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் இணைக்கப்படுவதால் தற்சார்பு உற்பத்தி வலுப்பெறுகிறது. மேலும், நடுவானில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பல மேம்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இந்த உற்பத்தித் திட்டத்தில் சுமார் 105 இந்திய நிறுவனங்கள் நேரடியாகச் சேர்ந்துள்ளன. நாசிக் பிரிவிலுள்ள எச்ஏஎல் தொழிற்சாலையில் 2,207 ஊழியர்கள் – இதில் 1,188 தொழில்நுட்ப நிபுணர்கள், 624 உதவியாளர்கள், 395 பொறியாளர்கள் – தேஜஸ் எம்கே-1ஏ உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களுக்கு தேவையான ஜிஇ-404 என்ஜின்கள் அமெரிக்காவில் இருந்து கிடைக்கின்றன. இவை பொருத்தப்பட்டவுடன் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு ஒப்படைக்கப்படும்.

Facebook Comments Box