உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை உருவாக்கும் ஆற்றல் இந்தியா: நிர்மலா சீதாராமன்

“உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை நிலைநிறுத்தும் ஆற்றலாக இந்தியா உள்ளது. இருப்பினும், அதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்ற தன்மையின் அபாயங்கள் பெரிய சவாலாகவே திகழ்கின்றன” என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற கவுடல்யா பொருளாதார மாநாடு 2025-இல் பங்கேற்று கொந்தளிக்கும் காலத்தில் செழிப்பைத் தேடுதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், “உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக இந்தியா விளங்குகிறது. ஆனால், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்ற தன்மையின் அபாயங்கள் கடின சவாலாகவே இருக்கின்றன.

சர்வதேச அமைப்பு மாறி வருகிறது. வர்த்தக அமைப்புகள் மறுசீரமைக்கப்படுகின்றன. கூட்டணிகள் சோதனைக்குட்படுகின்றன. முதலீடுகள் புவிசார் அரசியல் காரணிகளால் மாற்றப்படுகின்றன. பகிரப்பட்ட உறுதிமொழிகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.

நாம் எதிர்கொள்வது ஒரு தற்காலிக இடையூறு அல்ல, மாறாக ஒரு அமைப்பு மாற்றம். இதனால் சில கேள்விகள் எழுகின்றன: இந்த மாற்றத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது? புதிய சமநிலை எப்படியிருக்கும்? அதை யார், எந்த அடிப்படையில் உருவாக்கப் போகிறார்கள்?

ஆனால், நிதி ஒழுங்குபடுத்தல், மூலோபாய சீர்திருத்தங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் போன்ற பலமான உள்நாட்டு காரணிகள் இந்திய பொருளாதாரத்தை நங்கூரமிடச் செய்கின்றன. இது வெளிப்புற அதிர்ச்சிகளின் தாக்கத்தை குறைக்கிறது. அதேவேளை, நாம் அலட்சியமாக இருக்க முடியாது.

எரிசக்தி பாதுகாப்பு, புதுமை, தொழிலாளர் சந்தை, முதலீட்டு தேவை ஆகியவற்றால் வளரும் நாடுகள் கடினமான சமரசங்களைச் சந்திக்கின்றன. இத்தகைய வாணிகச் சவால்கள் எளிதில் தீர்ப்பதற்கானவை அல்ல.

அதிர்ச்சிகளை உள்வாங்கும் இந்தியாவின் திறன் வலுவாக இருக்கிறது. ஆனால், பிற இடங்களில் எடுக்கப்படும் முடிவுகள் நமது விதிகளை நிர்ணயிக்கும் உலகில் நாம் பார்வையாளர்களாக மட்டும் இருக்க முடியாது. எனவே, உலகளாவிய விளைவுகளை உருவாக்குவதில் வளரும் நாடுகள் பங்கெடுக்க வேண்டும். சாத்தியமான இடங்களில் விளைவுகளை உருவாக்க வேண்டும்; தேவையான இடங்களில் சுயாட்சியைப் பாதுகாக்க வேண்டும்.

எனவே, இந்த தருணத்தை வெறும் நெருக்கடியாக அல்ல, ஒரு திருப்புமுனையாகக் காண வேண்டும். நமக்கு எதிர்காலம் என்ன தருகிறது என்பதைக் குறித்து சிந்திக்க மட்டுமல்லாமல், நாம் உருவாக்க விரும்பும் எதிர்காலத்தை வரையறுக்கும் உரையாடல்களிலும் ஈடுபட வேண்டும்” என்றார்.

Facebook Comments Box