எஸ்யூவி, சேடன் கார்களுக்கான உயர்தர டயர்கள் – முதல்முறையாக இந்தியாவில் மிச்செலின் தயாரிப்பு
மிச்செலின் நிறுவனம் கார்களுக்கான உயர்தர டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரித்துள்ளது. இவை அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான டயர் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மிச்செலின் இந்தியா நிறுவனம், தற்போது எஸ்யூவி, சேடன் கார்களுக்கான உயர்தர டயர்களை இந்தியாவில் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் விட்டோர் சில்வா, மேலாண்மை இயக்குநர் சாந்தனு தேஷ்பாண்டே, மிச்செலின் சென்னை ஆலை இயக்குநர் புளோரன்ட் சாசேட் ஆகியோர் கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 900 கிமீ விரைவுச் சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 5,000 கிமீக்கும் மேற்பட்ட விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் இது 16,000 கிமீ தாண்டும்,” என அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
“இந்த மாற்றங்கள் நகரங்களுக்கு இடையேயான தொலைவை குறைத்துள்ளன. உதாரணமாக, சென்னை–பெங்களூரு பயணம் முன்பு 7 மணி நேரமாக இருந்தது; விரைவில் அது 2 மணி நேரமாகக் குறையும். டெல்லி–மும்பை சாலைப் பயணம் தற்போது 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைக்கப்படும்.”
இந்த மாற்றத்தால் பெரிய, பாதுகாப்பான, உயர்தர வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனையான கார்களில் 50% எஸ்யூவி வகை கார்கள்தான். 2030க்குள் எஸ்யூவிகள் இந்திய வாகன சந்தையை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கார்களுக்கான டயர்கள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. முன்பு 16 முதல் 22 இன்ச் அளவிலான எஸ்யூவி, சேடன் டயர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இப்போது, மிச்செலின் நிறுவனம் அவற்றை இந்தியாவில் முதல்முறையாக தயாரித்துள்ளது.
இந்த டயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம் காரணமாக, அவை நீண்ட ஆயுள் மற்றும் குறைந்த கார்பன் வெளியீடு ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.
இதற்காக கடந்த ஆண்டு, ரூ. 2,800 கோடி முதலீட்டில் கும்மிடிப்பூண்டியில் மிச்செலின் டயர் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டது. 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, 54,000 டன் ரப்பரை பயன்படுத்தி டயர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.