ரூ.90,000-ஐ நெருங்கியது தங்கம் விலை – புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 7) ஒரு பவுனுக்கு ரூ.90,000-ஐ நெருங்கியுள்ளது. இந்த திடீர் உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை ஏற்றத்துக்கான காரணங்களை பார்ப்போம்.
சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு போன்றவை தங்கம் விலையை தீர்மானிக்கின்றன. சமீபத்தில், அமெரிக்கா இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்தது, உக்ரைன்–ரஷ்யா போரும், இஸ்ரேல்–ஹமாஸ் மோதலும் தொடர்வதால் தங்கம் விலை ஏற்றமடைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,200-ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.88,600-ஆகவும் விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.648 உயர்ந்து ரூ.97,744-ஆகவும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.74,200-ஆகவும் உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், ஐப்பசி மாத முகூர்த்த நாட்களில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் தேவை அதிகரிக்கச் செய்கின்றன. அதனால் தங்கம் விலை இன்னும் உயரும் என வணிக வல்லுநர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.88.75 ஆக சரிந்திருப்பது, விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.