ரூ.90 ஆயிரத்தை எட்டும் நிலையில் தங்கம் விலை: நகை வியாபாரிகள் கருத்து என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் சில நாட்களில் ரூ.90 ஆயிரத்தை கடக்கும் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
சர்வதேச பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்க விலையில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து ஏற்பட்டுவருகின்றன. செப்டம்பர் 6ஆம் தேதி பவுனுக்கு ரூ.80,040 இருந்த தங்கம், செப்டம்பர் 23ஆம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. அமெரிக்கா எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியதும், ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக குறைந்ததும் தங்க விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
அதன் பின்னர் சில நாட்கள் விலை குறைந்தபோதும், பெரும்பாலான நாட்களில் விலை ஏற்றம் கண்டது. அதன் விளைவாக நேற்று முன்தினம் தங்கம் பவுனுக்கு ரூ.89 ஆயிரத்தை தொட்டது.
அதைத் தொடர்ந்து நேற்றும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ.97,744 ஆக இருந்தது. இதேசமயம், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.167, ஒரு கிலோ ரூ.1.67 லட்சமாக இருந்தது.
செப்டம்பர் 28ஆம் தேதி பவுனுக்கு ரூ.85,120 இருந்த தங்கம், அக்டோபர் 7ஆம் தேதி ரூ.89,600-ஆக உயர்ந்தது. இதனால், 9 நாட்களில் பவுனுக்கு ரூ.4,480 உயர்வை பதிவு செய்துள்ளது. நகை வியாபாரிகள் கணிப்பின்படி, தங்கம் விரைவில் ரூ.90 ஆயிரத்தை எட்டும் வாய்ப்பு உள்ளது.