இந்திய குடும்பங்களிடம் கிடக்கும் தங்கத்தை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்: ஜெரோதா சிஇஓ நிதின் காமத் கருத்து

பங்குத் தரகு நிறுவனமான ‘ஜெரோதா’வின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நிதின் காமத், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், “உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டின்படி, இந்திய குடும்பங்களிடம் சுமார் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான தங்கம் உள்ளது. இவை பெரும்பாலும் பயன்பாடு இன்றி வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றன. அதே நேரத்தில், பங்கு முதலீடுகள் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தை நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. எனவே, தங்கக் கடன்களைத் தாண்டியும், இந்த தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் சிறந்த வழிகளை உருவாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 1996 முதல் 2025 வரை தங்கம் மற்றும் நிப்டி 500 குறியீட்டின் வருவாய் விகிதத்தை ஒப்பிடும் ஒரு விளக்கப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 14% இந்தியாவில் இருப்பதாகவும், அதில் சுமார் 25 ஆயிரம் டன் தங்கம் இந்திய குடும்பங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 56% ஆகும்.

மேலும், உலகின் முதல் 10 தங்க கையிருப்பு நாடுகள் — அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும், இந்திய குடும்பங்களிடம் தங்க இருப்பு அதிகம் என எச்எஸ்பிசி குளோபல் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 876.18 டன் தங்கம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box