கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தம்: 5 மாநிலங்களில் சமையல் கேஸ் பற்றாக்குறை அபாயம்

கேஸ் டேங்கர் லாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கக் கோரி, தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் இன்று தொடங்கியதுடன், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் பற்றாக்குறை அபாயம் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாக வைத்து செயல்படுகிறது. இந்த சங்கத்தில் உள்ள கேஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் சொந்தமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பிபிசி), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (ஹெச்பிசி) ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்ல ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகின்றனர்.

மொத்தம் 5,000 கேஸ் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்காக சங்கத்தினர் ஆயில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இச்சூழலில், இன்று நாமக்கல்லில் தென்மண்டல கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா கலந்து பேசினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஆயில் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கேஸ் கொண்டு செல்லும் கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்த காலம் 5 ஆண்டுகளாகும். புதிய ஒப்பந்தத்தில் பல விதிமுறைகளை காரணமாக காட்டி சுமார் 700 லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.

இதனால், லாரி உரிமையாளர்கள் வேலை இழந்து, வண்டிகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். பலர் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காண, மத்திய அரசின் ஆயில் நிறுவன அதிகாரிகள் நாமக்கல்லுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 2016-க்கு மேல் மாடல் அனைத்து கேஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதுவரை தென்னிந்தியாவிலுள்ள அனைத்து 5,000 லாரிகளும் ஓட்டப்படாமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். தகுதியான அனைத்து லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும்.”

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த வேலைநிறுத்தம் தொடரினால், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர். இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் லாரி உரிமையாளர்களின் பெரும் தொகை கலந்து கொண்டனர்.

Facebook Comments Box