“இந்தியாவில் முதலீடு செய்ய இது சிறந்த தருணம்” – பிரதமர் மோடி

இந்தியாவில் முதலீடு செய்து, புதுமைகளை உருவாக்குவதற்கு இதுவே சரியான காலம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி யசோபூமி வளாகத்தில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை நேற்று தொடங்கி வைத்த பிரதமர், உரையாற்றியபோது கூறியதாவது:

மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ், மொபைல் போன்கள், செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களை அரசு விரைவுபடுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் முதலீடு செய்வதும், புதுமை முயற்சிகளை மேற்கொள்வதும் மிகவும் சரியான நேரம். ஜனநாயக அமைப்பு, அரசின் நேர்மையான கொள்கைகள் மற்றும் வணிகத்திற்கு ஏற்ற சூழல் ஆகியவை, இந்தியாவை முதலீட்டாளர்களுக்கு மிக நெருக்கமான நாடாக மாற்றியுள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா டிஜிட்டல் துறையில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று 1 ஜிபி டேட்டா ஒரு கப் தேநீரின் விலைக்கு குறைவாக கிடைக்கிறது. ஒருகாலத்தில் 2ஜி இணைப்புக்காக போராடிய நாடு, இன்று 5ஜி சேவை கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடைந்துள்ளது.

டிஜிட்டல் இணைப்பு இன்று ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையின் அங்கமாக மாறியுள்ளது.”

மேலும் அவர் கூறியதாவது:

“நிதி பாதுகாப்பு, குவாண்டம் தகவல் தொடர்பு, 6ஜி தொழில்நுட்பம், கண்ணாடி இழை இணைப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல புதுமையான தீர்வுகளை வழங்கி வருகின்றன.

மொபைல், தொலைத்தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறைகளில் உருவாகும் சவால்களுக்கு உலக நாடுகளுக்கே தீர்வுகளை வழங்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு.”

இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Facebook Comments Box