பிரான்சில் யுபிஐ அறிமுகம்: இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை 40% உயர்வு
இந்தியாவின் யுபிஐ (UPI) வழி பணப்பரிவர்த்தனை வசதி பிரான்சில் அறிமுகமானதைத் தொடர்ந்து, அங்கு இந்திய சுற்றுலா பயணிகள் வருகை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரெஞ்சு நிறுவனம் லைரா நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டோப் மரியெட் தெரிவித்துள்ளார்.
குளோபல் பின்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:
“ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியாவின் யுபிஐ சேவையை பிரான்சின் ஈஃபல் கோபுரத்தில் தொடங்கினோம். சில வாரங்களுக்கு முன்பு, ஈஃபல் கோபுரத்தின் பொது மேலாளருடன் பேசும் போது, இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 40% உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். இது நம்மை ஆச்சரியப்பட வைத்தது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது, யுபிஐ போன்ற பரிச்சயமான டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு எளிமையும் பாதுகாப்பும் அளிக்கிறது. விரைவில் பிரான்சின் பைசெஸ்டர் வில்லேஜ் ஷாப்பிங் மையத்திலும் யுபிஐ வசதி தொடங்கப்பட உள்ளது,” என்று கிறிஸ்டோப் மரியெட் தெரிவித்தார்.