ஆஸ்திரேலியாவில் நடைபெறும், ஐபிஎல் தொடருக்குப் பிறகு பெரும் பிரபலத்தை பெற்றுள்ள பிக் பாஷ் லீக் (BBL) கிரிக்கெட் தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணி பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேனான பாபர் அஸமுடன் ஒப்பந்தம் கைசாத்தி இருக்கிறது.
இத்தகவலை ஆஸ்திரேலிய ஊடகங்கள் பெரிதும் வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் பிக் பாஷ் வரலாற்றிலேயே மிக முக்கியமான வீரர் சேர்க்கையாக கருதப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள பாபர் அஸம், வெள்ளை பந்துப் போட்டிகளில் — குறிப்பாக டி20 மற்றும் ஒருநாள் (ODI) வடிவங்களில் — தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2022-ஆம் ஆண்டு, பாபர் ஐசிசி வழங்கும் ‘சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர்’ விருதையும், 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுகளையும் பெற்றவர்.
முந்தைய பாகிஸ்தான் கேப்டனாக இருந்த பாபர் அஸம் தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளார். இவர் 11,330 ரன்களை 43.07 என்ற உயர்ந்த சராசரியில் அடித்துள்ளார். இந்த அளவிலான ரன்களை இந்த விதமான சராசரியுடன் எட்டிய ஒரே வீரர் பாபர்தான் என்பது சிறப்பம்சமாகும்.
பாபர் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரிமியர் லீக் மற்றும் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் லீக்களில் விளையாடி அனுபவம் பெற்றுள்ளார். தற்போது டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளப் பாபருக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவை:
ரோஹித் சர்மா – 4,231 ரன்கள்
பாபர் அஸம் – 4,223 ரன்கள்
விராட் கோலி – 4,188 ரன்கள்
ஜாஸ் பட்லர் – 3,700 ரன்கள்
இந்த நிலையில், மூன்று BBL கோப்பைகள் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாபர் அஸம் இணைவது அந்த அணிக்கு வலு சேர்க்கும். அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித், மோய்சஸ் ஹென்றிக்ஸ் மற்றும் ஷான் அபாட் ஆகிய முன்னணி வீரர்கள் ஏற்கனவே உள்ளனர். பாபர் அஸம் இந்த பிக்பாஷ் சீசன் முழுவதும் விளையாடவுள்ளார்.
“சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன்.
ரசிகர்களுடன் நெருக்கமாக இருப்பதையும், என் உறவினர்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களுடன் இந்த அனுபவத்தை பகிர்வதையும் எதிர்நோக்குகிறேன்” என பாபர் தெரிவித்துள்ளார்.
பாபருடன் சேர்ந்து ஷாஹீன் ஷா அஃப்ரீதி, முகமது ரிஸ்வான் மற்றும் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் போன்ற பாகிஸ்தானிய வீரர்களும் இந்த ஆண்டின் பிக்பாஷ் லீகில் பங்கேற்க உள்ளனர்.