‘WTC ஃபைனலை விட ஐபிஎல்-க்கு முன்னுரிமை’ – ஹேசில்வுட்டை சாடிய மிட்செல் ஜான்சன்

0

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றதை தவறான முடிவாகக் கருதி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், ஜோஷ் ஹேசில்வுட் மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் நிறைவுற்ற 18-வது ஐபிஎல் சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் விளையாடினார். இந்த சீசனில் ஆர்சிபி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட எல்லை மோதலால், ஐபிஎல் தொடரில் சில நாட்கள் இடைநிறுத்தம் ஏற்பட்டது. இதனால், பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பினர்.

போர் நிறுத்தம் ஏற்பட்டதும், தொடரின் மீதமுள்ள போட்டிகள் மீண்டும் தொடங்கின. சிலர் திரும்பி வந்து மீண்டும் பங்கேற்றனர், சிலர் பங்கேற்கவில்லை. ஹேசில்வுட், இறுதிப் போட்டியில் ஆர்சிபிக்காக விளையாடினார். இந்த சீசனில் மொத்தம் 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணியுடன் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக ஹேசில்வுட் விளையாடினார். ஆனால், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றார். இதில் தென் ஆப்பிரிக்க அணியே சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதைக் கொண்டே ஹேசில்வுட் மீது மிட்செல் ஜான்சன் விமர்சனம் செய்து கூறியதாவது:

“ஹேசில்வுட் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் காரணமாக போட்டிகளில் இடைவெளி எடுத்துள்ளார் என்பது உண்மை. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய போட்டிக்கு தயாராக வேண்டிய நேரத்தில், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதையே தேர்ந்தெடுத்தது ஏமாற்றமளிக்கிறது. அவரது அந்த முடிவு, அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் முக்கிய பவுலர்கள். ஆனால் அனுபவத்திற்காக மட்டுமே அவர்களை தொடர்ச்சியாக அணியில் வைத்திருக்கக் கூடாது. சாம் கான்ஸ்டாஸ், ஜாஷ் இங்கிலிஸ் மற்றும் 36 வயதுடைய ஸ்காட் போலண்ட் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். வரவிருக்கும் தொடர்களில், பவுலிங் மற்றும் முக்கியமாக பேட்டிங் டாப் ஆர்டரில் சில மாற்றங்களை தேர்வுக் குழுவினர் பரிசீலிக்கலாம் என நான் நினைக்கிறேன்” என ஜான்சன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here