தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார். நடிகரும் அவரது சகோதரரும் கடுமையான காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ (வயது 43), தன் தந்தை சிபி சாக்கோ, தாய் மரியம் கார்லஸ் மற்றும் சகோதரர் ஜோக்கர் ஷாக் (36) ஆகியோருடன் மருத்துவ தேவைக்காக கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி கார் மூலம் நேற்று இரவு பயணித்தார். இந்தக் காரை திருச்சூரைச் சேர்ந்த அனீஸ் (42) ஓட்டிச் சென்றார்.

இவர்கள் பயணம் செய்த கார் இன்று அதிகாலை தருமபுரி வழியாக பாலக்கோடு பகுதிக்கு வந்தபோது, கொம்பநாயக்கனஅள்ளி அருகே பாறையூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி ஒன்றின் மீது எதிர்பாராத விதத்தில் மோதியது. மோதலால் காரின் முன்னுப் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

விபத்தில் நடிகரின் தந்தை சிபி சாக்கோ உடனடியாக உயிரிழந்தார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் கடுமையாக காயமடைந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலக்கோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments Box