பிரபலமான தெலுங்குப் பின்னணி பாடகி மங்களி, பல தனி இசை ஆல்பங்களை வெளியிட்டு புகழைப் பெற்றவர். அதன் பின்னர், அவருக்கு தெலுங்குத் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஹைதராபாத் அருகிலுள்ள ஈர்லபல்லி என்ற பகுதியில் உள்ள ஓர் ஆடம்பரமான பங்களாவில் தனது நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து அளித்தார்.
இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். சுமார் 50 பேர் கலந்து கொண்ட இந்தப் பார்ட்டி பகல் விடியும் வரை தொடர்ந்தது. இதனால் அருகிலுள்ள வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அன்று அதிகாலை 3 மணிக்கு அங்கு சென்று பார்ட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தினர். அந்த இடத்தில் வெளிநாட்டு மது மற்றும் கஞ்சா பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்து அங்கே உள்ள அனைவரிடமும் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாடகி மங்களி உள்ளிட்ட பலர் கஞ்சா உபயோகித்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது ரங்காரெட்டி மாவட்ட போலீசார் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.