2022-ஆம் ஆண்டில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றிக்கு பின்னர், தற்போது அதன் பின்கதையை அடிப்படையாகக் கொண்டு ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள மாணி அணையில் நடைபெற்றது. ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழு அங்கு சென்ற போது, பயன்படுத்தப்பட்ட படகு கவிழ்ந்ததாக கூறப்பட்டது. இது ஆழமில்லாத பகுதியில் நடந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. ஆனால் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமரா மற்றும் பிற உபகரணங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக செய்திகள் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவல்களை படக்குழு மறுத்துள்ளது. இதுகுறித்து நிர்வாக தயாரிப்பாளரான ஆதர்ஷ் ஜா கூறியதாவது:
“ஒரு காட்சியின் பின்னணியில் படகு தேவைப்பட்டதால் நாம் அதை படமாக்கினோம். ஆனால் அதிக மழையும், பலத்த காற்றும் காரணமாக அந்த படகு கவிழ்ந்தது. ரிஷப் ஷெட்டி உள்பட எவரும் அந்த படகில் இல்லை. அதே நேரத்தில் படப்பிடிப்பு நடந்த இடம், அந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்தது. அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். படப்பிடிப்பு திட்டமிட்டபடியே நடைபெற்று வருகிறது” என்றார்.