நடிகை சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் – இறுதி ஊர்வலத்தில் பெரும் கூட்டம்
பழமையான திரைபிரபலமும், பல்வேறு மொழிப் படங்களில் கலைசேவையாற்றிய நடிகை சரோஜாதேவியின் (வயது 87) உடல், நேற்று அவரது பிறந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து திரையுலகில் தனி இடத்தை ஏற்படுத்திய இவர், இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூருவில் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு எம்ஜிஆர் மன்றத்தின் தலைவர் சி.எஸ்.குமார் தலைமையில் திரளான ரசிகர்களும், பெருந்தொகையான கன்னட ரசிகர்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவரது உடல், சென்னபட்ணா அருகிலுள்ள அவரது பூர்வீக கிராமமான தஷாவராவிற்கு வாகன ஊர்வலமாக எடுக்கப்பட்டது. ஊர்வல பாதையில் நிறைந்திருந்த மக்கள் மலர்தூவி அவருக்கு தங்களது அஞ்சலியை தெரிவித்தனர்.
தொடர்ந்து அவரது உடல் தஷாவரா கிராமத்தின் கொடிஹள்ளி தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், அவரவர் சமூக மரபுப்படி இறுதி சடங்குகளை நடத்தினர்.
பின்னர் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து போலீஸ் அணிவகுப்புடன், துப்பாக்கிச் சுடுதலுடன் அரசு மரியாதையின் கீழ் சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவரின் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.