மலையாள நடிகர் ஓட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு
மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகருமான கலாபவன் நவாஸ் (வயது 51), சின்னத்திரை மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். மிமிக்ரி கலைஞராகவும் இவர் அறியப்பட்டவர். ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக, கேரளாவின் சோட்டானிக்கரா பகுதியில் வந்திருந்தார். அங்குள்ள ஓட்டலில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததால் அறையை காலியாக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், நீண்ட நேரமாக அவருடைய அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் பணியாளர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர். அந்த நேரத்தில், கலாபவன் நவாஸ் சுயநினைவின்றி கிடந்தார்.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிபடுத்தினர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட தகவலின்படி, மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நவாஸின் மரணம் மலையாள திரைப்பட உலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். மரணமடைந்த கலாபவன் நவாஸுக்கு ரெஹானா என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.