கோபி – சுதாகரின் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தில் சிவகார்த்திகேயனின் குரலில் ஒரு பாடல்!
‘பரிதாபங்கள்’ கோபி மற்றும் சுதாகர் நடித்துள்ள ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமான கோபி மற்றும் சுதாகர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், விடிவி கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை புதிய இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை சக்திவேல் மற்றும் கே.பி.ஸ்ரீ கார்த்திக் மேற்கொண்டுள்ளனர். இசையமைப்பாளராக ஜேசி ஜோ பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தின் முதல் சிங்கிளாக வெளிவந்த ‘வேணும் மச்சான் பீஸ்’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது குரலில் பாடியுள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதிய இந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தற்போது, இந்த படத்தின் இறுதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இரு இளைஞர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்த கமர்ஷியல் ஃபேன்டஸி திரைப்படம், “உண்மை என்றும் நிலைத்து நிற்கும், நெறி எப்போதும் வெற்றி பெறும்” என்ற எண்ணத்தை மையமாகக் கொண்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.