‘காத்தி’ ட்ரெய்லர் எப்படி? – மீண்டும் ஆக்ஷனில் அனுஷ்கா!
விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘காத்தி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கிய இந்தப் படத்தில், அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி உள்ளது? – ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் மீண்டும் அனுஷ்கா ஆக்கிரமித்துக் களமிறங்குகிறார். கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளை மையமாகக் கொண்டு, பழங்குடியின பெண்ணாக அனுஷ்கா, அவரது காதலனாக விக்ரம் பிரபு ஆகியோர் நடித்திருப்பது ட்ரெய்லரில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு கார்ப்பரேட் வில்லனை எதிர்த்து, தங்கள் சமூகத்தைக் காக்க இருவரும் போராடும் கதையமைப்பாக ட்ரெய்லர் அமைந்துள்ளது.
அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபு இருவரும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகளில் உறுதி, உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்கள். விறுவிறுப்பான திரைக்கதையுடன், பரபரப்பான காட்சிகள் அமைந்திருந்தால், இப்படம் பல மொழிகளில் உறுதியான வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘காத்தி’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.