பட்ஜெட் ரூ.6 கோடி; வசூல் ரூ.50+ கோடி – ‘சு ஃப்ரம் சோ’ படம் அமைதியாக சாதனை படைத்துள்ளது
கன்னடத்தில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம், நாடு முழுவதும் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இப்படம், அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25ம் தேதி வெளியானது. முழுமையான பெயராக ‘சுலோச்சனா ஃப்ரம் சோமேஷ்வரா’ எனப்படும் இந்த படம், பெரிதாக விளம்பரமில்லாமல் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் வெளியான சில நாள்களிலேயே படத்தைப் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் வாய்மொழி பரப்பாக விரைந்து, பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது.
மொத்தம் ரூ.6 கோடி செலவில் உருவான இப்படம், இந்திய அளவில் இதுவரை ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும், BookMyShow தளத்தில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுள்ளன.
ஆகஸ்ட் 1ம் தேதி கேரளாவில் வெளியான இப்படம் அங்கும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. இப்படத்தை ராஜ் பி. ஷெட்டியின் Lighter Buddha Films நிறுவனம் தயாரித்துள்ளது. கேரளாவின் விநியோக உரிமையை துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் பெற்றது. தெலுங்கில் Mythri Movie Makers நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
பட்ஜெட் பெரியதாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும், நல்ல கதை மற்றும் திரைக்கதை இருந்தாலே ஒரு படம் வெற்றியை அடையக்கூடும் என்பதற்கான உதாரணமாக ‘சு ஃப்ரம் சோ’ திகழ்கிறது.