‘கூலி’ வெளியீடு: ரசிகர் உற்சாகம் முதல் படக்குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து வரை
ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதும், ரசிகர்கள் பரபரப்புடன் வரவேற்றுள்ளனர். இதனையடுத்து, படக்குழுவினரை அழைத்து வாழ்த்தியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம், மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் இன்று (ஆகஸ்ட் 14) திரைக்கு வந்தது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கும் ஆரம்பமானது. டிக்கெட் முன்பதிவில் ‘கூலி’ பல சாதனைகள் படைத்தது.
வெளிமாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கே படம் வெளியானதால், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் தீவிர ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளில் கூடியிருந்தனர். முதல் காட்சியை கண்ட நெட்டிசன்களின் விமர்சனங்கள் கலவையாக வந்துகொண்டிருக்கின்றன.
இதற்கிடையில், ‘கூலி’ படக்குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த சந்திப்பின் புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி” என குறிப்பிட்டார்.
இதற்கு முன், நேற்று படம் பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “அனைத்துத் தரப்பினரையும் கவரும் மாஸ் எண்டர்டெய்னராக ‘கூலி’ மிகச் சிறப்பாக வந்துள்ளது” என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.