‘அக்யூஸ்ட்’ படக் குழு மீண்டும் இணைகிறது!
உதயா, அஜ்மல், யோகி பாபு நடித்த ‘அக்யூஸ்ட்’ படத்தை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். கன்னட நடிகை ஜான்விகா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
பின்னர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் நடிகர் உதயா உரையாற்றும்போது,
“இந்தப் படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை போன்றவை நிறைய இருக்கின்றன. ஒரு படத்தை வெளியிடவே தடுக்கிறார்கள். ஆனால் அதையும் கடந்து இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம் மக்கள் தான்.
சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அது உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ‘மோனோபோலி’யாக இருக்கிறது என்பதை நிச்சயமாகச் சொல்கிறேன். இதில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்.
இத்தனை ஆண்டுகள் அனுபவம் கொண்ட எங்களுக்கே இப்படி நிலைமை இருந்தால், புதிய தயாரிப்பாளர்கள் எப்படி இருக்க முடியும் என சிந்திக்கவே கஷ்டமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சுயநலம் அதிகமாக உள்ளது. அங்கு வலிமையான அணி உருவாக வேண்டியது அவசியம்.*
‘அக்யூஸ்ட்’ படக் குழுவாக மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானித்துள்ளோம்” என்று கூறினார்.