என் படங்களில் 2-ம் பாகம் எடுக்க உகந்த கதை ‘துப்பாக்கி’ – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
தனது படங்களில் 2-ம் பாகம் உருவாக்க உகந்த படம் ‘துப்பாக்கி’தான் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது அதன் 2-ம் பாகத்தை உருவாக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
தனது படங்களில் எதனை 2-ம் பாகம் செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “‘துப்பாக்கி’ பண்ணலாம். ஏனென்றால் கதையாகவே அப்படி அமைந்தது. ஹீரோ ராணுவத்துக்கு சென்றுவிட்டார். இங்கு குடும்பம் இருக்கிறது. குடும்பத்துக்கு ஏதேனும் நடக்கலாம், அல்லது ராணுவ இடத்தில் ஏதேனும் நடக்கலாம், அல்லது மீண்டும் விடுமுறைக்கு அவர் திரும்பலாம். இப்படி பல்வேறு விஷயங்களோடு தான் படத்தை முடித்திருப்பேன். அது திட்டமிட்டேதான் வைத்தேன்.
ஏனென்றால், அப்படத்தில் சத்யன் ஒரு காட்சியில் “ஒவ்வொரு தடவையும் லீவுக்கு வருவ, ஏதாவது பிரச்சினைய பண்ணி விட்டுருவ. நான் சப்-இன்ஸ்பெக்ட்ரா இருந்து இன்ஸ்பெக்ட்ரா மாறுவனா, திரும்ப கீழே இழுத்து விட்டுருவ” என்று சொல்வார். ஆகையால் திரும்ப பார்ட் 2 பண்ணலாம் என்ற எண்ணம் இருக்கிறது.
ஸ்லீப்பர் செல் வைத்து ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் எல்லாம் வந்திருக்கிறது. மும்பையை பின்னணியாக கொண்டு அந்த மாதிரி கதைகள் எவ்வளவு வேண்டுமானாலும் பண்ணலாம்,” என்று அவர் தெரிவித்தார்.