மணிரத்னமும் ஷங்கரும் ஏன் முக்கியம்? – ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம்
சமீபத்தில் இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் ஷங்கர் இயக்கிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைச் சந்தித்தன. இதனால் இணையத்தில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், அவர்களை எளிதில் குறைத்து மதிப்பிட முடியாது என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
*“மணி சார், ஷங்கர் சார் – இவர்களின் ஒரு படத்தின் தோல்வியை வைத்து அவர்களை மதிப்பிட முடியாது. ஷங்கர் சார் ஒரு சாதாரண கமர்ஷியல் இயக்குநர் அல்லர். அவர் எடுக்கும் பிரம்மாண்ட படங்களில்கூட குடும்பத்தோடு பேசிக்கொள்ளத்தக்க ஒரு சமூகச் செய்தி இருக்கும்.
ரோட்டில் நடந்தால் எதுவும் தெரியாது. ஆனால் ரோடு போட முயற்சி செய்யும் ஒருவருக்கு தான் முள் குத்தும், கல் தடுக்கிறது. அதுபோல மணிரத்னம் சார், ஷங்கர் சார் சந்திக்கும் சிரமங்கள் அவர்களது முன்னோடி முயற்சிகளின் விளைவுதான். அவர்கள் போடும் பாதையில் தான் பிறரும் சென்று வெற்றி பெறுகிறார்கள். எனவே அவர்களின் தோல்வியை எளிதில் சொல்லிவிட முடியாது.”*
மேலும் அவர் கூறுகையில்:
*“நான் அவர்களின் ரசிகன். உலகத் திரைப்படங்கள் எத்தனை பார்த்தாலும், நம் ஊரில் பாரதிராஜா சார், பாலசந்தர் சார் போன்ற முன்னோடிகள் இருக்கிறார்கள். அவர்கள் காட்சிகளை சொன்ன விதம், இந்திய சினிமாவில் யாராலும் செய்ய முடியாத ஒன்று. பெரிய சாதனைகள் படைத்தவர்கள் தமிழ் இயக்குநர்களே.
மற்ற மொழிகளில் 100 கோடி படங்கள் உருவாகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பொழுதுபோக்கு படங்களே. தமிழில் மட்டும் தான் இயக்குநர்கள், ‘செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது’ எனக் கற்றுக்கொடுக்கும் படங்களை உருவாக்குகிறார்கள். தமிழ் சினிமாவுக்கும், மற்ற மொழித் திரைப்படங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.”*
இவ்வாறு கூறியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.