ரூ.6 கோடி செலவில் தயாராகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த ‘சு ஃப்ரம் சோ’

கன்னடத்தில் வெளியாகி பாராட்டுப் பெற்றுவரும் ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான இந்த படம், ‘சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா’ எனும் முழுப் பெயரில் திரையரங்குகளில் வெளியானது. பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படாமல் வெளியான இப்படம், சில நாட்களிலேயே நல்ல விமர்சனங்கள் வாய்மொழியாக பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது.

மொத்தம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், நாடு முழுவதும் ஆச்சர்யமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.77.86 கோடி, வெளிநாடுகளில் ரூ.14.15 கோடி என மொத்தம் ரூ.105 கோடி வசூல் 24 நாட்களில் எட்டியுள்ளது.

அண்மையில் பெரிய பட்ஜெட்டில் வந்த ‘ஹரிஹர வீர மல்லு’, ‘கிங்டம்’ போன்ற படங்கள் பல சவால்கள் சந்தித்த நிலையில், ‘சு ஃப்ரம் சோ’ கடந்த வாரம் வெளியான ‘கூலி’, ‘வார் 2’ போன்ற படங்களுடன் போட்டியிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

ராஜ் பி. ஷெட்டியின் லைட்டர் புத்தா பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தின் கேரள விநியோக உரிமையை துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் பெற்றது. தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை வெளியிட்டது.

எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை வலிமையாக இருந்தால், அதிக விளம்பரம் இன்றி மக்களை சென்றடைய முடியும் என்பதற்கான சான்றாக ‘சு ஃப்ரம் சோ’ திகழ்கிறது.

Facebook Comments Box