‘த பெங்கால் ஃபைல்ஸ்’ பட விழா தடை: மேற்கு வங்க அரசை கடுமையாக விமர்சித்த பல்லவி ஜோஷி
இந்தியா சுதந்திரம் பெற்ற மறுநாளே, மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் மத கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில் இந்துக்கள் சந்தித்த துயரங்களை மையமாகக் கொண்டு, இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார்.
முன்னதாக அவர் ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தையும் இயக்கியிருந்தார். புதிய படத்தில் தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சிம்ரத் கவுர், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், சாஸ்வதா சாட்டர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 16ஆம் தேதி கொல்கத்தாவின் ஒரு பிரமாண்ட ஓட்டலில் நடைபெற்றது. ஆனால் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்ததால், விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. போலீசார் திடீரென நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில், இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியின் மனைவியும் நடிகையுமான பல்லவி ஜோஷி, மேற்கு வங்க அரசுக்கு எதிராக கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“இந்தப்படத்தின் கதை மேற்கு வங்கத்தை மையமாகக் கொண்டதால், அங்குதான் டிரெய்லரை வெளியிடுவது சரியானது என்று எண்ணினோம். ஆனால் அரசு எங்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் தெரிவித்த காரணம் முற்றிலும் சிரிப்பூட்டும் வகையில் இருந்தது. போலீஸாரின் நடமும் சரியாக இல்லை. இந்த நடவடிக்கை தன்னிச்சையானதோடு, அரசியலமைப்புக்கும் எதிரானது. உண்மையில் இது ஜனநாயகத்தையே தாக்கும் செயலாகும்” என்று அவர் விமர்சித்தார்.