“கடவுள் எனக்கு அளித்த அரிய வரம் கெனிஷா” – ரவி மோகன் உணர்ச்சி
நடிகர் ரவி மோகன், “என் வாழ்க்கையில் கடவுள் எனக்கு கொடுத்த அரிய பரிசு கெனிஷா” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில், தனது தயாரிப்பில் மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களையும் ரவி மோகன் அறிவித்தார். பின்னர் பேசிய அவர், தனது தோழி கெனிஷா குறித்து உருக்கமாகக் குறிப்பிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
“இன்றைய விழா முழுவதும் நடைபெற காரணம் கெனிஷாதான். இதை எல்லாம் எனக்காக மட்டுமே அவர் செய்தார். யாரும் இதுவரை எனக்காக இப்படிச் செய்யவில்லை. இவ்வளவு பெரிய அளவில் மக்கள் வருவார்கள் என்பதையும் நான் எதிர்பார்க்கவில்லை.
ரவிமோகன் ஸ்டூடியோஸின் பங்குதாரராகவும் கெனிஷா இணைந்துள்ளார். மனிதன் வாழ்க்கையில் தடுமாறும் நேரத்தில், கடவுள் அவனுக்கு ஏதாவது அரிய ஒன்றை அனுப்புவார் – அது பணமாகவோ, பொருளாகவோ, வாகனமாகவோ இருக்கலாம். ஆனால் எனக்குக் கடவுள் தந்த பரிசு கெனிஷாதான். நான் யார் என்பதை உணர வைத்தது அவர்தான். இப்படிப்பட்ட ஒருவர் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார் ரவி மோகன்.