“ரவி மோகனின் பல திறமைகளை உலகமே அறிய வேண்டும்” – பாடகி கெனிஷா உணர்ச்சி பூர்வம்
சென்னையில் நடைபெற்ற ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ தொடக்கவிழாவில் பாடகி கெனிஷா தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தொடங்கினார். இதற்கான தொடக்கவிழா மிகுந்த விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் சிவராஜ்குமார், ஜெனிலியா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கெனிஷா,
“நான் பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மிக சிகிச்சையாளர். இப்போது ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’-ன் பங்குதாரராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரவி மோகனுக்கும், கடவுளுக்கும், எனது பெற்றோர்களுக்கும், ராஜா அண்ணாவுக்கும் நன்றி. நீண்ட காலமாக நான் தனிமையில் இருந்தேன்; ஆனால் ரவி மூலம் அழகான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரவி மோகனுடன் இணைந்து, இந்த ஸ்டூடியோவை மிகப்பெரிய அளவில் வளர்ப்பது எங்களின் கனவு. எங்களது குழுவின் உழைப்பால் தான் இந்த நாள் சாத்தியமானது. ரவி பற்றி சொல்வதானால், வாழ்க்கையில் எத்தனை சிரமங்களையும் தாண்டியும், பிறருக்கு எப்போதும் வெளிச்சம் தரும் நபர் அவர்.
இப்போது என்னிடம் ரவி மோகனின் ஏழு ஸ்கிரிப்ட்கள் உள்ளன. அவருடைய அனைத்து திறமைகளையும் இந்த உலகம் கண்டாக வேண்டும் என்பது எனது பெரும் விருப்பம். நான் கண்டுள்ள ரவியின் உள்ளார்ந்த கடவுளை உலகமே காண வேண்டும் என்பதே என் ஆசை. வெற்றி பெற அவர் காட்டும் உழைப்பு அபாரமானது.
வரலட்சுமி அம்மா அருகில் இருப்பின், ஏன் ரவி மோகன் இவ்வளவு சிறந்த மனிதர் என்பதை உணர முடியும். இப்படிப்பட்ட நபரை நமக்கு அளித்ததற்காக அம்மாவிற்கு நன்றி” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.