“என் சோகம் என்னோடுதான்” – கவனம் ஈர்க்கும் ‘ப்ரோகோட்’ அறிமுக டீசர்

ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படத்தின் அறிமுக டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இதில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார்.

இதில் ரவியுடன் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்துக்கான அறிமுக டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 5 நிமிடம் ஓடும் இந்த டீசரில் மனைவிகளால் ஏற்படும் அழுத்தங்களை வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெளியே சிரிக்கும் மூன்று கணவன்களைப் பற்றிய அறிமுகம் காட்டப்படுகிறது. தம்பதிகளாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் – எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் – மாளவிகா மனோஜ், ரவிமோகன் – கவுரி பிரியா இடையிலான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக பின்னணியில் இளையாராஜாவின் ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ பாடல் வரும் இடம் ரகளை. இந்த டீசர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

Facebook Comments Box