ஐ.டி. ஊழியர் தாக்குதல் வழக்கு: நடிகை லட்சுமி மேனன் கைது செய்ய இடைக்கால தடை
கொச்சியில் ஐ.டி. ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் உட்பட நால்வர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
அதை விசாரித்த நீதிபதி பெச்சுகுரியன் தாமஸ், செப்டம்பர் 17 வரை லட்சுமி மேனனை கைது செய்யக் கூடாது என்று நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அன்றைய தினம் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
புகார் விவரம்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சி பாரில், லட்சுமி மேனன் தரப்பும் ஆலுவாவைச் சேர்ந்த ஒரு ஐ.டி. ஊழியரின் தரப்பும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின், எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனன் உடன் இருந்தவர்கள் அந்த ஐ.டி. ஊழியரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் லட்சுமி மேனன் மற்றும் மிதுன், அனீஷ், சோனமோல் ஆகிய மூவர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் மூவரும் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருந்து வருகிறார். மேலும், அவருடைய மொபைல் போனும் தற்போது ஆஃபாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எர்ணாகுளம் வடக்கு போலீசாரின் தகவலின்படி,
“நடிகை மற்றும் மூன்று பேர், ஐ.டி. ஊழியர் மற்றும் நண்பர்கள் பயணித்த காரைத் தொடர்ந்து சென்றனர். பாலத்தில் காரை நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். பின்னர், ஐ.டி. ஊழியரை வலுக்கட்டாயமாக அவர்களது காரில் ஏற்றி சென்றனர். பரவூர் அருகே உள்ள வெடிமாரா சந்திப்பில் இறக்கி விடும் வரை காரிலேயே கடுமையாக தாக்கினர்” என கூறப்பட்டது.
இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் வரும் செப்டம்பர் 17 வரை லட்சுமி மேனனை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.