“50 ஹீரோயின்கள் என்னை புறக்கணித்தனர்” – நடிகர் பாலா மனவலி
புதிய படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் பாலா, “50க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் கதை பிடித்திருந்தும் என்னுடன் நடிக்க மறுத்தனர்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
‘காந்தி கண்ணாடி’ படத்துக்கான செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“ஹீரோயின் தேர்வுக்காக பலர் அலுவலகம் வந்தார்கள். கதை கேட்டதும் அனைவரும் கதை நல்லதாக இருக்கிறது என்றார்கள். ஆனால் ‘ஹீரோ யார்?’ என்று கேட்டவுடன் ‘பாலா’ என்று சொல்லியதும், பிறகு பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்கள். இதுபோல பலர் புறக்கணித்தனர். மொத்தம் 50 பேர் என்னை நிராகரித்தனர். அது அவர்களுடைய தவறு அல்ல. நானும் பெரிய மனிதர் இல்லை. ஆனால் 51வது ஹீரோயினாக வந்தவர் நமிதா கிருஷ்ணமூர்த்தி. அவர் எந்த தயக்கமுமின்றி, ‘நான் கண்டிப்பாக நடிப்பேன்’ என்று ஒப்புக்கொண்டார்,” என்றார்.
பாலா நாயகனாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தை, ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார். ‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரீப் இதை இயக்கியுள்ளார். பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையை விவேக் – மெர்வின் இணைந்து வழங்கியுள்ளனர்.
படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும். அதே நாளில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படமும் வெளியாக உள்ளது.
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான பாலா, பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், சமூகத்தில் உதவும் குணத்தால் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தையும் பெற்றுள்ளார்.