விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து
நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், தன்ஷிகாவுடன் தனது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் தன்ஷிகாவுடன் காதலில் இருப்பதை உறுதிப்படுத்தியிருந்த விஷால், “எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெறும் முதல் திருமணமாக இருக்கும்” என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடுவதாக அவர் முன்பே தெரிவித்திருந்தார். அதன்படி தனது பதிவில்,
“இந்த பிறந்த நாளில் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றிகள். இன்று எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் எனக்கும் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, பல்வேறு திரையுலக பிரபலங்கள் விஷால் – தன்ஷிகா இணைக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.